விரிந்து பரந்துகிடக்கும் வெளியில் எரிந்துகொண்டிருக்கும் கதிரவனை காலங்காலமாய் சுற்றிவரும் கோள்கள் கூட களைக்கவில்லை என்பதால்தான் காலமழை பெய்கிறது,கடும்வெயிலும் சுடுகிறது,இரவுபகல் வருகிறது,இயற்கையும் இணைகிறது.கோள்களின் கோடுதாண்ட கொள்கையால்தான் அவை மோதி உடையவில்லை,முறைமாறிப்போய் தனியாயும் கிடக்கவில்லை,தன்பாட்டில் தகரவில்லை,தான்போய் என்கேயும் இணையவில்லை.இயற்கைக்கு இருக்கும் இத்தனை நட்பு இன்று எவர் இதயத்தில் இருக்கிறது என்பதுதான் எனது கேள்வி?
"கெடுங்காலைக் கைவிடுவார்க் கேண்மை,அடுங்காலை
உள்ளினும் உள்ளம் சுடும்".....வேதனை வரும்போது விலகுவார் நட்பை,இறப்பின் வாசலில் நிற்கையில் நினைப்பினும் இதயம் சுடுகிறது. "கேட்டினும் உண்டோர் உறுதி, கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்"..... என்பதனால் வேதனைதான் வேண்டாத நட்பை விரட்டிவிட வழியமைக்குமென்கிறது குறள்.
நன்மை தீமை எதுவரினும் நானும் வருவேன் என்று கூறி,நாள் குறித்து நான்குபேர் சாட்சியாக நடத்தும் நாடகமல்ல நட்பு.வாதப்பிரதிவாதங்களுக்கிடையே வரம்புகட்டி வாழ்க்கை நடத்துவதுமல்ல நட்பு.மன்னித்துக்கொள்ளக் கூறி மறுபடியும் சந்தித்துக் கொள்வதுமல்ல நட்பு.இல்லை மாற்றானின் தடைகளுக்காய் பயந்து தாவிக்கொள்வதுமல்ல நட்பு.கட்சி மாற்றும் காடையர்க்கும் காவு கொள்ளும் கள்வர்கட்கும் கனதியான காட்சிப்பொருள் நட்பு மாற்றும் நீங்களல்லவா?வீட்டில் வைத்து விருப்பிவளர்க்கும் நாய் விருந்து போதாதென்று வீதியில் வீசியெறிந்த விருந்திலையை துலாவுவது போலிருக்கிறது உங்கள் கட்சித் தாவல்.
உணர்வுகளின் உரசலைவிட உதடுகளின் உரசலையும்,உள்ளத்தின் உரசலைவிட உடலின் உரசலையும்தான் உள்ளூரப்பார்க்கும் உங்களால்தான் காதலும், நட்பும் கற்பிழந்து கிடக்கிறது.காழ்ப்பிழந்து தவிக்கிறது.உங்களிடம் மாறுதல் வேண்டும் என்பதற்காய் என்னை மன்னிக்கவேண்டும்.என்னை மன்னிக்கவேண்டுமென்பதற்காய் நீங்கள் மாறித்தானாக வேண்டும்.துஞ்சிவிட்ட தூய நட்புப்பற்றி நான் தொடர்கதை எழுத விரும்பவில்லை.எழுதிவிட முடியாத அத்தியாயம் அது.ஆனால் துரோகக்கேண்மைபற்றி துளியேனும் எழுதவேண்டுமென்பதற்காய் மானுடத்தின் பாகத்தில் மறைந்து கிடக்கும் நட்பியல்பை நாகரீக வேகத்தில் நயவஜ்ஞனையை தேவைக்குப் பயன்படுத்தும் தேவையற்ற மனிதர்களின் தேடுதலை நிறுத்தி,வீடுமாறி உறவு கொள்ளும் அவ்விருந்தினரின் வேசத்தினை கலைத்துவிடத் தலைப்படுகிறது என்கரங்கள்.பாவத்தின் மன்னிப்பு பலதுக்கும் கொடுத்தாலும் பழகி பாய்ந்துவிட்டுப்போன பச்சோந்தித்தனத்திற்கு மாறுதல் கொடுக்கும்,மன்னிப்பளிக்கும் மறையெதுவோ,சட்டமெதுவோ,மனு நீதியெதுவோ கிழித்தெறியக் கொண்டுதாருங்கள்.
விலைபேசிப்போகும் பெண்ணுக்கும்,தேவைக்காய் பழகும் கேண்மைக்கும் என்ன வேறுபாடிருக்கிறது?இதை நான் சோகத்தில் சொல்லவில்லை.மானுட சமுகத்தின்பால் கொண்ட கோபத்தில் சொல்லியுள்ளேன்.தேகத்தின் பாதையில் ஓர் நாள் நானும் சடமானால் கூட உண்மை நட்பு மரணப்படுக்கையின் மலர்மாலை மணமாக இருக்கவேண்டுமென்ற வேகத்தில் எழுதிவிட்டேன்.பள்ளிப்படலைவரை வருவதுவோ நட்பு?இல்லை! பாடைவரை வருவதுவே நட்பு என்ற கோணத்தில் எழுதிவிட்டேன்.ஒன்றுமட்டும் கேட்கிறேன்.. உங்களுக்குள் மனமிருந்தால் துரத்திவிடத்துணிந்துவிடுங்கள் உங்களுக்குள்ளிருக்கும் துரோகியையும்,உங்களோடிருக்கும் துரோகிகளையும். ஆக நண்பனுக்கு எதிர்ச்சொல் பகைவனென்ற அகராதியை அழித்துவிட்டு துரோகியென்னும் இலக்கணத்திற்கு இணக்கி தேடுங்கள்.......தேடுங்கள்.....சுயனலத்தைவிட்டுவிட்டு துரோகிக்கு எதிர்ச்சொல்லெவர் என்பதை.மானுட தேசத்தில் மண்புதைந்த இதயத்தை தோண்டியெடுத்து ஒருமுறை துவைத்தபின்பு மானுடத்தில் தேடிக்கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை தேடி அடைந்துவிட்டால் தேடலின் பொருள் விளங்கும்.என் கேள்விக்கும் பதில் கிடைக்கும்.
தொடர்ந்து விழிக்கும்.........
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வரவேற்கிறேன்
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment